அதிமுக அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை முழுவதும் 22 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவின் போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ், வைத்தியலிங்கம், ஜெசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் நுழைய முயற்சித்தபோது எடப்பாடி பழனிசாமி அணியினருடன் கடும் மோதல் ஏற்பட்டது.
பின்னர் கட்சி அலுவலகத்தில் நுழைந்த ஓபிஎஸ் அணியினர் கட்சியின் கதவுகளை உடைத்தும், உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தியும், சில ஆவணங்களை எடுத்தும் சென்றிருந்தனர். அதனால் கடந்த 8 மாதங்களாக காவல்துறையினர் 24 மணி நேரமும் கட்சி அலுவகத்தின் வாயில், மற்றும் அவ்வை சண்முகம் சாலையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுபோன்று அசம்பாவிதம் மீண்டும் ஏற்படாமால் கண்காணிக்க தலைமை அலுவலகத்தில் நவீன கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்சி அலுவலகத்தின் வெளிபுறம் உள்ள சாலையின் இரு புறமும் தெளிவாக கண்காணிக்கும் வகையிலும், வாயில் கதவு, தரை தளம் நுழைவு வாயில், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம்தளம், நான்காம் தளம் அலுவலக பின்புற பகுதி உட்பட முழுவதும் கண்காணிக்கும் வகையில் மொத்தம் 22 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பதிவாகும் வகையில், இதனை அலுவலக பணியாளர்கள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக சிசிடிவி பொருத்தும் பணி நடைபெற்ற நிலையில், நேற்று மாலை முதல் சிசிடிவி இயங்கத் தொடங்கியுள்ளது.