சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி, நாச வேலை மிரட்டல்கள் போன்ற சதி வேலைகளை முறியடிப்பது குறித்து, பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகையில் விமான நிலைய தீவிரவாதிகள் எதிர்ப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள், மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், விமான நிலைய போலீசார், சென்னை மாநகர போலீசார், தீயணைப்பு படையினர், மருத்துவக் குழுவினர், அதிரடிப்படையினர் கலந்து கொண்ட, பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கும் மற்றும் சென்னையில் பறந்து கொண்டிருக்கும் விமானங்களுக்கும் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் மற்றும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் வருவது வழக்கமாக உள்ளது. அதைப் போன்ற மிரட்டல் வரும் போது, உடனடியாக விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனைகள் நடத்திவிட்டு, வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என்று அறிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வித்தியாசமான முறையில், இதே போன்ற வெடிகுண்டு மிரட்டல் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காலங்களில், உடனடியாக எடுக்க வேண்டிய அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, ஒரு ஒத்திகை நிகழ்ச்சி பரபரப்பாக நடந்தது.
அப்போது நேற்று முன்தினம் மாலை சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மற்றும் தீவிரவாதிகள் விமான நிலையத்துக்குள் ஊடுருவல் குறைத்து இணையதள தகவல் வந்துள்ளதாக தகவல் பரப்பப்பட்டது.
இதை அடுத்து சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் தலைமையில், உடனடியாக தீவிரவாதிகள் எதிர்ப்பு பாதுகாப்பு அதிகாரிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதோடு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சென்னை விமான நிலைய போலீசார், சென்னை மாநகர போலீஸ் படையினர், தீயணைப்பு படையினர், மருத்துவ குழுவினர், அதிரடி படையினர், விமான பாதுகாப்பு படையினர் உட்பட அனைத்து தரப்பினரும், அவசர அவசரமாக சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிக்கு விரைந்து வந்தனர். அதோடு அங்கு அணிவகுப்புகள் நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று பேரை தீவிரவாதிகள் போல் நடிக்க செய்து, அவர்கள் விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதிக்குள் புகுந்து, நாச வேலைகளில் ஈடுபட முயற்சிப்பது போல், அதே நேரத்தில் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிரடி படையினர் அந்த மூன்று தீவிரவாதிகளையும் சுட்டு பிடித்து, உடனடியாக அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்வது போலவும், இந்த ஒத்திகை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் தத்ரூபமாக நடத்தப்பட்டது.
அதன் பின்பு இந்த ஒத்திகை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக விமான நிலைய இயக்குனர், இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த பாதுகாப்பு ஒத்திகையால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.