சென்னை கோயம்பேட்டில் ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளார். லாரியை பின்னால் (reverse) எடுக்கும் போது கழிவு நீர் தொட்டி உடைந்து லாரி கவிழ்ந்தது.லாரியில் இருந்து தப்பிக்க கீழே குதித்த ஓட்டுநர் லாரியின் அடியில் சிக்கி உள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் நடைபெறும் பாஷியம் தனியார் கட்டுமான பணிக்காக குன்றத்தூர் அருகே எருமையூரில் இருந்து ஜல்லி கொண்டு வரப்படுகிறது. இன்று அதிகாலை காஞ்சிபுரம் மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் சங்கர் ஜல்லி ஏற்றிக் கொண்டு கோயம்பேட்டில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் ஜல்லி கொட்ட லாரியை பின்னால் எடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த கழிவு நீர் தொட்டியின் மேல் மூடி உடைந்து லாரி கவிழ்ந்துள்ளது.
உடனடியாக ஓட்டுநர் லாரியில் இருந்து தப்ப கீழே குதித்துள்ளார்.அப்போது லாரி அவர் மீது விழுந்தது. அப்போது அருகே இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததோடு கிரேன் உதவி மூலம் லாரியை தூக்கி அடியில் சிக்கி இருந்த ஓட்டுநரை மீட்டுள்ளனர். அதற்குள் சங்கர் உடல் நசுங்கி உயிர் இழந்து இருந்தார்.
உடலை மீட்டு கே.எம்.சி மருத்துவமனைக்கு உடல் கூறாய்விற்கு அனுப்பி வைத்த கோயம்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.