சென்னையில் இன்று அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது சென்னை மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் இன்று அதிகனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால், சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைவு என கணித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள வலைதள பதிவில், காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்று கடக்கும் பகுதிக்கு வடக்கே இருக்கும் என்பதால் சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புகள் இல்லை என்றும், சாதாரண மழையே பெய்யலாம் என்றும் பிரதிப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்னையில் 18 -20ம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தில் நகரும்போது, சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழை பெய்யும் என்றும், எனவே பொதுமக்கள் மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள தங்களது வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருவதாகவும், கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் பிரதிப் ஜான் தெரிவித்துள்ளார்,