மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமே முதல்வர் பதவி- ரஜினிகாந்த்
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்படக் கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.
முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இக்கண்காட்சியை மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கண்காட்சியை பார்வையிட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு மகிழ்ந்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, நடிகர் யோகிபாபு உள்ளிட்டோரும் ரஜினியுடன் சேர்ந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.
கண்காட்சியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சி மிக அற்புதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கைப் பயணம், அரசியல் பயணம் இரண்டுமே ஒன்றுதான்.
மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு மக்கள் அவருக்கு கொடுத்த அங்கீகாரமே முதலமைச்சர் பதவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பதவிகள் வகித்து கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்.படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதலமைச்ச மு.க.ஸ்டாலின்.” என புகழாரம் சூட்டினார்.