கலைஞர் நாணயத்தை வெளியிடும் நிகழ்வில் ராஜ்நாத்சிங் பெருந்தன்மையோடு பங்கேற்றார் அதற்கு நன்றி சொன்னோம், மற்றபடி கூட்டணி அமைக்க எல்லாம் வாய்ப்பு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களான பொன்முடி,சேகர் பாபு , மேயர் பிரியா, மற்றும் எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,நூறு வருடத்திற்கு முன்பு பெண்கள் வீட்டின் படிக்கட்டை தாண்ட முடியாத நிலை இருந்ததாகவும் தற்போது பெண்கள் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் சாதனை புரிந்து வருவதாகவும் தெரிவித்தார். பெண்களுக்காக புதுமைப் பெண்கள் என்ற திட்டத்தின் மூலமாக 3 லட்சம் மாணவிகள் பயன்பெறுவதாகவும் குறிப்பாக தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண்கள் திட்டம் மூலமாக ஆண்டு தோறும் 6 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவதாக அவர் தெரிவித்தார்.
பீ.டி பீரியடு வரும் போது கணிதம் மற்றும் அறிவியல் பேராசிரியர்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் மாணவர்களை விளையாட அனுமதியுங்கள் என பேராசிரியர்களுக்கு கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
ராஜ்நாத்சிங் கலைஞர் நாணயத்தை வெளியிடும் நிகழ்வில் பெருந்தன்மையோடு பங்கேற்றார் அதற்கு நன்றி சொன்னோம், மற்றபடி கூட்டணி அமைக்க எல்லாம் வாய்ப்பே இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என்றார். மேலும், கட்சி கொடி மற்றும் பாடல் வெளியிட்டுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உயர்கல்வி சதவீதம் 51ஆக உயர்ந்துள்ளது. கல்வி தரமும் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் ஆராய்ச்சி படிப்புக்காக வரும் அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணைக்கை உயர்ந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் புகார் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படுகிறது. தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும்,உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என முதல்வர் செயல்படுவார். திமுக தன் கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்காது. பாஜகவுடன் உறவு என திமுகவை விமர்சிக்க அதிமுகவுக்கு எந்த தகுதி இல்லை என பொன்முடி சாடினார்.