கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வரை மட்டுமே குறை சொல்வது தவறு, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் – மருத்துவர் ரவீந்திரநாத்
அண்மையில் மேற்கு வங்க மாநில கொல்கத்தாவில் முதுகலை மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததைக் கண்டித்து சமூக சமத்துவததிற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் ஆகியோர் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
டாக்டர் ரவீந்திரநாத் பேசுகையில் மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமெனில் இந்த வழக்கு முழுமையாக சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும், அந்த மாணவியின் மரணத்திற்கு மேற்குவங்க அரசும், ஒன்றிய அரசும், கல்லூரி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மட்டுமே குறை சொல்ல கூடாது. ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா, இவையனைத்தும் தேசிய மருத்துவ ஆணையகத்தின் கட்டுப்பாட்டில் வருவதை உணர்ந்து ஒன்றிய அரசும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்தியா முழுவதும் எந்த ஒரு மருத்துவமனைகளிலும் போதிய பாதுகாப்பு வசதி செய்ய தவறிய தேசிய மருத்துவ ஆணையத்தையும், 4 போர்டு தலைவர்களையும், நிர்வாகத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தேசிய, மாநில, மாவட்ட அளவில் மருத்துவ மாணவர்களின் நலன் காக்க மருத்துவ மாணவர்கள் நல வாரியம் உருவாக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் மருத்துவமனை பாதுகாப்புக் குழு என ஒன்றை உருவாக்கி அதில் செவிலியார்கள், மருத்துவர்கள் , என குழுவை உருவாக்க வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவியை மேலும் அதிகரித்து வலுப்படுத்த வேண்டும், கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்றிட கோரிக்கை விடுத்தார்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு வாரத்தில் 72 மணிநேரம் வேலை செய்வதென்பது மனித உரிமை மீறல் எனவும் உடனே இதை மாற்றி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.