தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நான் தயாராக இல்லை என்று கூட்டணி குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அம்பேத்கரின் வாழ்நாள் முழுவதும் போராட்டமாக இருந்தது. அவரது போராட்டத்தை தொடர்ந்து, அவரது எண்ணம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டோம். பாஜகவுடன் நான் கூட்டணி என ஏன் என்னை பிடித்து தள்ளுகிறீர்கள்.
நான் யாருடைய அறிவுரையையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு சொந்தமாக மூளை உள்ளது. சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. நான் என்ன நினைப்பேனோ அதை தான் செய்கிறேன். நான் தனித்து தான் போட்டியிடுவேன் தொடர்ந்து இதை திரும்பத் திரும்ப கூறி வருகிறேன். சாதி ஒரு மனநோய் ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும் படிந்திருக்கும் அழுக்கு. ஒரு மனிதன் சக மனிதனை தாழ்த்தி வீழ்த்தி சுகம் காண்பதற்கு மன நோய் என்றுதான் பெயர்.
எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைத்துவிட்டது என்றால் இந்த ஏற்ற தாழ்வுகள் அழிந்துவிடும் என நினைக்கிறேன். பொருளாதாரத்தில் மேம்படும்போது சாதிய ஏற்றத்தாழ்வுகள் சிறுக சிறுக செத்து ஒழிவதை பார்க்கிறோம். ஜெய் பீம் என்று சொல்வதில் எனக்கு சிறுமை இல்லை பல மடங்கு பெருமை தான் உள்ளது. தேர்தல் அரசியல், திருடர்பாதை, தேர்தல் பாதை என்பதில் எல்லாம் உடன்பாடு இல்லை மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட நாட்டில் கடைசி வலிமை அரசியல் அதிகாரம் தான்.
அம்பேத்கரை போல கல்வியாளர், அறிவு ஆசான் யாருமில்லை. இன்று உள்ள திராவிட அதிகாரம் மிகக் கொடுமையானதாக உள்ளது. ஊழலை ஒழிப்பேன் என கூறுகிறீர்களே யாரோடு சேர்ந்து ஒழிப்பீர்கள். மதுக்கடைகளை மூடுவேன் என கூறுகிறீர்களே யாரோட சேர்ந்து மதுக்கடைகளை மூடுவீர்கள். தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நான் தயாராக இல்லை என்னுடைய பயணம் எனது காலில் தான் உள்ளது.
39 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. அதைவிட அதிகமாக ஊழல் நடந்திருக்கும் என்று தான் நினைக்கிறேன். பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கூடிய நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்துகள். அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பது அவரது கட்சியின் செயல்பாடு தான், அதைப்பற்றி நான் கூற முடியாது.
சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை