சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கல்லூரி மாணவிகள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆட்டம், பட்டம் என உற்சாகத்துடன் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்து மாணவிகளின் மைம் கலை நாடகம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பொறியியல், கலை கல்லூரிகளை சார்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக இண்டிகோ ஏர்லைன்ஸ் பெண் விமானி லவ்லி பெர்னாண்ட் , டெர்மடாலஜிஸ்ட் பைரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழிப்புணர்வு பேரணியுடன் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பெண் விமானி லவ்லி பெர்னாண்ட், பெண்கள் தன்னம்பிக்கையுடன் எடுத்த காரியத்தை முடிக்கும் உறுதியுடன் தைரியத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஒரு விமானி என்ற பதவியை எட்ட தான் கடந்து வந்த பாதைகள் மிகவும் கடினமாக இருந்தாக கூறிய அவர் ஜைனீஸ் பாம்போ என்ற குட்டிக்கதையை கூறி கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதை தொடர்ந்து மாணவிகளின் பரத நாட்டியம், சிலம்பம், வாள் வீச்சு, மைம் கலை நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதேபோல் பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் சீண்டல்கள், வன்கொடுமை குறித்து தத்துருபமாக நடித்து கட்டினர்.
குறிப்பாக பேருந்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டகள், காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் வீசுவது போன்ற செயல்களை நடித்துக் காட்டியதும் அதில் எப்படி தப்புவது என்பதையும் நடித்துக்காட்டி அசத்தினர்.
இதனை தொடர்ந்து 2 ஆயிரம் மாணவர்களும் குத்தாட்டம் போட்டு அரங்கம் அதிர உற்சாக முழக்கம் எழுப்பினர்.