உலகிலேயே முதன்முறையாக அதி நவீன முறையில் 5,132 மூளையின் செல் பிரிவுகளை துல்லியமாக கண்டறியும் 3D படங்களை ஐ.ஐ.டி சென்னை வெளியிட்டுள்ளது.
ஆராய்ச்சி, கண்டுபிடிப்பில் சென்னை ஐ.ஐ.டி. எப்போதும் தனித்துவமாக விளங்குகிறது. அந்த வகையில் மனித மூளையை 3டி வடிவிலான தொழில்நுட்பத்தை கொண்டு அதன் செல்-தெளிவுத் திறன் படங்களை சென்னை ஐ.ஐ.டி. எடுத்து வெளியிட்டு உள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் மனித மூளையின் பாதி பகுதியைத்தான் இதுவரை படமாக எடுத்து வெளியிட்டு இருக்கின்றன. இதற்காக அவர்கள் செலவு செய்த தொகை என்பது 150 முதல் 200 மில்லியன்(அதாவது ரூ.1,500 கோடிக்கு மேல்) டாலர் ஆகும்.
ஆனால் சென்னை ஐ.ஐ.டி., மத்திய அரசு, முன்னாள் மாணவர், தன் சொந்த நிதி ஆகியவற்றில் இருந்து ரூ.115 கோடியை செலவு செய்து மனித மூளையின் முழு பகுதிகளை படமாக எடுத்து, அதில் 5 ஆயிரத்து 132 மூளைப் பிரிவுகளை உலகிலேயே முதல் முறையாக 3டி தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தியிருக்கிறது. இந்த படங்களை மனித மூளை தொடர்பான ஆராய்ச்சிக்கும், எதிர்காலத்தில் மனித மூளை குறித்த சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
மனித மூளை தொடர்பான 3டி படங்களை https://brainportal.humanbrain.in/publicview/index.html என்ற இணையதளத்தில் அனைவரும் சென்று தெரிந்துகொள்ளும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் வெளியிட்டுள்ளது.
கருவில் 14-வது வாரம் முதல் 24-வது வாரம்(2nd trimester) வரையில், அதாவது 14, 17, 21, 22 மற்றும் 24-வது வார இறந்த குழந்தைகளின் மூளைகள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனை 0.5 மைக்ரான் அளவுக்கு வெட்டி எடுத்து மைக்ரோஸ்கோப் மூலம் 3டி வடிவிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இந்த பயணத்தை தற்போது வெற்றிகரமாக சென்னை ஐ.ஐ.டி. முடித்துள்ளது. ஆனாலும் இது ஆரம்பம் என்றே சொல்லப்படுகிறது. இன்னும் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அதுசார்ந்த படங்களையும் வெளியிட இருக்கிறது.
கூகுள் மேப்பில் எவ்வாறு இடங்களை நுட்பமாக தேடி பார்க்கிறோமோ? அதேபோல், இந்த 3டி தொழில்நுட்ப படங்கள் வாயிலாக மனித மூளையை நுட்பமாகவும், தெளிவாகவும் பார்க்க முடியும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று நடைபெற்றது ., ஐ.ஐ.டி. சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் தலைவர் மோகனசங்கர் சிவபிரகாசம், இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் டாக்டர் குமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பேசிய சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, மூளை என்பது புரியாத புதிராக இருந்த நிலை மாறி இப்போது அதனை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளும் அளவுக்கு இந்த ஆய்வு பயன்படத் தொடங்கியுள்ளது. மூளை எப்படி வளருகிறது? அதற்கு என்னென்ன பிரச்சினை வருகிறது? மூளையை நோய்கள் எப்படி பாதிக்கிறது? என்பது போன்ற ஆராய்ச்சிகளையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம்.
இந்தியா நினைத்தால் எந்த ஆராய்ச்சியையும் செய்ய முடியும் என்பதை சென்னை ஐ.ஐ.டி.யின் இந்த ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. குழந்தைகளுக்கு மூளை பிரச்சினை வராமல் தடுப்பதற்கு இது பெரிய உதவிகரமாக நிச்சயம் இருக்கும். ‘எந்திரன்’ திரைப்படத்தில் உணர்ச்சி கொண்ட ரோபோ மனிதனாக சித்தரித்து காட்டப்பட்டது உண்மையாக மாறுவதற்கும் இந்த ஆய்வு பயன்படும் இந்த முயற்சிக்கு நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய ஐஐடி சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் தலைவர் மோகனசங்கர் சிவபிரகாசம், கருவில் இருந்து இந்த ஆராய்ச்சிக்காக நாங்கள் பயன்படுத்திய பெரும்பாலான உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. ஐஐடி மற்றும் சவீதா நிறுவனம் இணைந்து இந்த ஆராய்ச்சியை செய்துள்ளோம்.. 15 மில்லியன் டாலர் செலவு செய்து இந்த தொழில்நுட்பம் செய்யப்பட்டுள்ளது. Principal of scientific education, Prime minister office இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு நிதி வழங்கி உள்ளனர்.
அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5,132 மூளைப் பிரிவுகள் டிஜிட்டல் முறையில் பெறப்பட்டுள்ளன. இந்தப் பணியால் நரம்பியல் துறை மேம்படுத்தப்படுவதுடன், மூளையைப் பாதிக்கும் உடல்நிலைக்கான சிகிச்சையின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
இத்தகைய மேம்பட்ட மனித நரம்பியல் தரவுகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது என்றார்.
இது குறித்து பேசிய சவிதா மருத்துவ கல்லூரி முதல்வர் , தற்போதைய கரு இமேஜிங் தொழில்நுட்பங்கள், ஆரம்பகால நோயறிதல், வளர்ச்சிக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளித்தல் போன்றவை இம்முயற்சி பல ஆண்டுளாக மனித நரம்பியல் ஆராய்ச்சியை மேலும் முன்னேற்றுவதற்கான செயல்படும். பல்வேறு மருத்துவ நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு வகையான, வயதுடைய (கரு, பிறந்த குழந்தைகள், வளரிளம் குழந்தைகள், வயது வந்தோர், முதியோர்) மற்றும் நோய்வாய்ப்பட்டோர் (பக்கவாதம், டிமென்ஷியா) என 200-க்கும் மேற்பட்ட நோய்களை கண்டறிய உதவும்.
மூளை குறித்து படித்து அதன் தன்மையை தெரிந்துக் கொள்வதன் மூலம் ஆரம்ப காலத்திலேயே மூளையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சை வழங்க முடியும். சர்வதேச தரம் வாய்ந்த ஆராய்ச்சியை இந்தியாவிலும் செய்ய முடியும் என்பதற்கு இந்த ஆராய்ச்சி முன்னுதாரணமாக அமையும் என கூறினார்.