நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தற்போது டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்ஸிக், டெஸ்ட், மண்ணாங்கட்டி, ராக்காயி போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் இந்த படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜையில் சுந்தர். சி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், குஷ்பூ, மீனா, யோகி பாபு, ரெஜினா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் நடிகை மீனாவும் திரைத்துறையில் கிட்டத்தட்ட 45 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அதன்படி மீனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், பிரபு, அஜித் ஆகிய முன்னாடி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். அதுமட்டுமில்லாமல் எந்தவித கவர்ச்சியும் இல்லாமல் நடித்து ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர். இத்தகைய பெருமையுடைய மூத்த நடிகையான மீனாவை நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டார் என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக நயன்தாராவின் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்தாலும் மீனாவின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
எனவேதான் சமீபத்தில் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஒரு சிங்கம், ஆடு தன்னை பற்றி என்ன நினைக்கிறது, என்ன சொல்கிறது என்பதை பற்றி கவலைப்படாது” என்றும் “உங்களது நல்ல உள்ளத்தை மட்டும் எண்ணி பெருமை கொள்ளுங்கள். அனைவரிடமும் இந்த பண்பு இருக்காது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆதலால் இந்த பதிவினை நடிகை மீனா, நயன்தாராவை குறிப்பிட்டு தான் வெளியிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் வளரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகை நயன்தாரா, சமீபகாலமாக தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த லிஸ்டில் தற்போது இதுவும் இணைந்து இருக்கிறது.