நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக SK 25 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் இது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேபோல் இந்த படத்திற்கு என்ன டைட்டில் வைக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் புறநானூறு என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு தற்போது பராசக்தி என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமீப காலமாக தகவல் வெளியாகி வந்தது. இது தொடர்பான அறிவிப்பும் இன்று (ஜனவரி 29) மாலை 4 மணி அளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25ஆவது படத்திற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு தமிழில் ‘சக்தித் திருமகன்’ என்றும் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ‘பராசக்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் SK 25 படக்குழுவுக்கும் ட்விஸ்டாக அமைந்துள்ளது.
ஏனென்றால் சிவகார்த்திகேயனின் SK 25 படத்திற்கு பராசக்தி என்பது தான் டைட்டில் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு பராசக்தி என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பது சிவகார்த்திகேயன் படத்திற்கு சிக்கலாக அமைந்துள்ளது. எனவே SK 25 படத்திற்கு ‘பராசக்தி 1965‘ என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இன்று மாலை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.