தென்னிந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021 இல் வெளியான புஷ்பா திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து வெளியான புஷ்பா 2 திரைப்படமும் வெறும் 6 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாயை கடந்து இமாலய வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு படமும் வெறும் ஆறு நாட்களில் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. இப்படி இருக்கும் சூழலில் நேற்று (டிசம்பர் 13) அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரம் திரைத்துறையை மட்டுமல்லாமல் இந்தியாவையே திருப்பிப் போட்டது. அதாவது கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஐதராபாத்தில் சந்தியா திரையரங்கிற்கு புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுன் வருகை தந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்ற பெண் ஒருவர் பலியானார். இது தொடர்பான வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்காக திரை பிரபலங்களும் ரசிகர்களும் கொந்தளித்துள்ளனர். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும் இவ்வளவு பெரிய நடிகர் ஏன் நேரடியாக தாக்கப்படுகிறார்? என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டில் அஜித், விஜய் ரசிகர்களின் படம் வெளியாகும் போது கூட இதுபோன்ற துயர சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த 2017ல் ரயீஸ் பட ப்ரொமோஷனுக்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரயிலில் பயணித்தார். அப்போது ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தார். இது போன்ற விளைவுகள் பல இடங்களில் நடக்க தான் செய்கிறது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் அல்லு அர்ஜுன் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டார்? உயிரிழந்த அந்தப் பெண்ணிற்கு நீதி வாங்கி தருவதற்காக அல்லு அர்ஜுன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது போல் தெரியவில்லை என்றும் கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்ததற்கு ஒரு தனி நபர் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபோல திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்த பின்னரும் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். எனவே இது அல்லு அர்ஜுனை அரசியல் வளையத்திற்கு கொண்டுவர போடப்படும் திட்டமா? அவருடைய கைதுக்கு பின்னால் ஏதேனும் அரசியல் பழிவாங்கல் இருக்கிறதா? அவருடைய கைதுக்கு பின்னால் இருப்பது யார்? என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த சமயத்தில் டெல்லியில் வெற்றி விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய அல்லு அர்ஜுன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி சொல்ல வந்தார். அப்போது அவரது பெயர் நினைவில்லாமல் இரண்டு முறை தடுமாறினார். அதன் பின்னர் சமாளித்து ரேவந்த் ரெட்டியின் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார் அல்லு அர்ஜுன். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே இது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களாக இருக்கும் என சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளும் ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அல்லு அர்ஜுன் மீது பவன் கல்யாணுக்கு இருந்த கோபத்தினாலும் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் யோசிக்க தோன்றுகிறது.