19 கோடி ஓட்டுகள் மோசடி தொடர்பாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் வி ஜே அர்ச்சனா விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டவர் அர்ச்சனா. இந்த நிகழ்ச்சி கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு தொடர்ந்து 105 நாட்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பிக் பாஸ் டைட்டிலைத் தட்டிச் சென்றார் அர்ச்சனா. 50 லட்சத்துக்கான காசோலை, 15 லட்சம் மதிப்பிலான வீடு, சொகுசு கார் ஆகியவற்றை பரிசாகப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் இந்த வெற்றிக்காக அர்ச்சனா பணம் கொடுத்து ஓட்டுக்களைப் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து பதில் அளித்துள்ளார் அர்ச்சனா. அவர் கூறியிருப்பதாவது, “பிக் பாஸ் சீசன் 7, இறுதிப் போட்டியில் எனக்கு 19 கோடி வாக்குகள் கிடைத்தன. ஒரு வாக்குக்கு ஒரு ரூபாய் கொடுத்திருந்தால் கூட 19 கோடி ரூபாய் செலவாகி இருக்கும். டைட்டில் வின்னருக்கு பரிசாகக் கிடைக்கும் மொத்தத் தொகையே 50 லட்சம் தான். அதைப் பெறுவதற்காக 19 கோடி ரூபாய் செலவிடும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை” என்று கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அர்ச்சனா.
அதே சமயம் பிரபல தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்களின் எண்ணிக்கையே மூன்று கோடி தான் அர்ச்சனாவிற்கு எப்படி 19 கோடி ஓட்டுகள் கிடைத்திருக்கும் என்றும் நிச்சயம் இது மோசடி தான் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.