பிரபல மலையாள இயக்குநர் ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கத்தில் உருவான திரைப்படம் 2018. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான இத்திரைப்படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து குஞ்சாகோ போபன் , நரேன், லால், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மலைாள மொழியில் வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, இப்படம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
மலையாள சினிமாவிலேயே 2018 திரைப்படம் தான் குறுகிய நாட்களில் அதிக வசூலை வாரிக்குவித்தது. திரையரங்குகளில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் வரை வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மாபெரும் வெள்ள பாதிப்பை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது. வெள்ளத்தின்போது கேரளாவே தத்தளித்த சம்பவங்களை உணர்வுப்பூர்மாக காட்சிப்படுத்தியிருந்தனர்.
இத்திரைப்படம் இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில் ஆஸ்கர் பட்டியலுக்கு இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் பங்கேற்க உள்ள படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் இடம்பெறவில்லை. இது மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.