காந்தாரா 2 படப்பிடிப்பில் 500 சண்டைக் கலைஞர்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி நடிப்பில் காந்தாரா எனும் திரைப்படம் வெளியானது. ஹோம்பாலை ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து வெளியான இந்த படத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கியும் இருந்தார். அதாவது ரூ. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று ரூ. 400 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி, காந்தாரா – சாப்டர் 1 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமானது காந்தாரா முதல் பாகத்திற்கு முந்தைய காலகட்டத்தில் அதாவது கிபி 31 முதல் 400 காலகட்டங்களில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதுவும் தெய்வ நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டது. எனவே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் பிரம்மாண்டமான போர்க்களக் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வருவதாகவும் அந்த படப்பிடிப்பில் 500 சண்டை கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாகுபலி படத்தில் படத்தில் பிரம்மாண்ட சண்டை காட்சிகள் இடம்பெற்று இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேபோல் காந்தாரா 2 படத்தின் சண்டைக் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.