கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியிருந்தார். இதில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நல்ல ஒரு பீல் குட் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 16) 70 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் நித்யா மேனனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் தேசிய விருது பெருமளவுக்கு அவரது நடிப்பு இல்லை எனவும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் நித்யா மேனனுக்கு பதிலாக 2022 ஆம் ஆண்டில் வெளியான கார்கி திரைப்படத்தில் நடித்திருந்த சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அறிவித்திருக்கலாம் என்றும் விவாதித்து வருகின்றனர். அத்துடன் 2022-ல் வெளியான சீதாராமம் திரைப்படத்தில் சீதா மகாலட்சுமியாக நடித்து பலரின் இதயங்களை கொள்ளையடித்தவர் மிர்ணாள் தாகூர். அவருக்கு இந்த விருது கிடைக்கவில்லை எனவும் பல ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.