நடிகை ஸ்ரீதேவி 80ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். ஸ்ரீதேவி 1969இல் வெளியான துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் நடித்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றார். அதன் பிறகு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தனது நடிப்பினாலும் நடனத்தினாலும் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து திரைத்துறையில் தனக்கான முத்திரையை பதித்தார். குறிப்பாக 16 வயதினிலே திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்து மயிலு கதாபாத்திரம் பெரிதளவும் பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் புகழின் உச்சியை அடைந்தார். அதைத் தொடர்ந்து மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, அடுத்த வாரிசு, போக்கிரி ராஜா என ஏராளமான வெற்றி படங்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தவிர்க்க முடியாத நடிகையாக உருவெடுத்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். கிட்டத்தட்ட 300 படங்களுக்கும் மேல் நடித்த ஸ்ரீதேவிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சிறிய இடைவெளிக்குப் பிறகு 2012ல் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற பாலிவுட் படத்தில் மீண்டும் களமிறங்கினார். அதைத்தொடர்ந்து மாம் படத்தில் நடித்து தேசிய விருதை வென்றார். இருப்பினும் இந்த விருதை பெறுவதற்கு முன்னரே கடந்த 2018 பிப்ரவரி 24 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார் ஸ்ரீதேவி. இவரின் இறப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.