பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்-க்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சோனு சூட் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பெயர் பெற்றவர். அந்த வகையில் இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ராஜா, ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி, சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் கடந்த ஜனவரி மாதம் விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சோனு சூட். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இவர், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பல உதவிகளை செய்து வருபவர். இந்நிலையில் இவருக்கு பஞ்சாப் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்ற வழக்கறிஞரிடம் நடிகர் சோனு சூட் ரூ. 10 லட்சம் மோசடி செய்திருப்பதாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சோனு சூட்டை நேரில் ஆஜராக மாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் சோனு சூட்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசாருக்கு பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் சோனு சூட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.