இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய கோரி வழக்கு
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமானார். தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிட் அடித்தது. இதையடுத்து, விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படம் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் அளவில் ஹிட் அடித்தது.
கமல்ஹாசனுடன் வெற்றிப்படத்தை கொடுத்த லோகேஷ் அடுத்து, விஜய்யுடன் மீண்டும் இணைந்த திரைப்படம் லியோ. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இத்திரைப்படம் கடந்தசெப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியானது. அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஆரம்பம் முதலே சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி அதில், வெற்றியும் கண்டு வருகிறார். டாப் நடிகர்களை வைத்து சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனும் திரை உலகத்தை தொடக்கி வைத்த பெருமையும் லோகேஷ் கனகராஜை தான் சேரும் .அடுத்ததாக இவர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். பைட் கிளப் எனும் படத்தை தயாரித்து வெளியிட்டார்.
இந்நிலையில், வன்முறை காட்சிகள் நிறைந்த லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும், இத்திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.