பிரபல நடிகை பார்வதி நாயருக்கு கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.
மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறையில் நுழைந்தவர் நடிகை பார்வதி நாயர். தற்போது இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் கமல்ஹாசனின் உத்தம வில்லன், அஜித்தின் என்னை அறிந்தால் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்தது கடந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பார்வதி நாயர். மேலும் வைபவுடன் இவர் இணைந்து நடித்திருக்கும் ஆலம்பனா திரைப்படம் 2025 மார்ச் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இவ்வாறு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் பார்வதி நாயர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடக்கப் போவதாகவும் கூறியிருந்தார். அதன்படி இன்று (பிப்ரவரி 10) பார்வதி நாயர் சென்னையில் உள்ள திருவான்மியூரில் தனது காதலர் ஆஷ்ரித் அசோக்- ஐ கரம் பிடித்தார்.
இருவிட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதள பக்கத்தில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பார்வதி நாயரின் திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.