பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் தான் சிவராஜ் குமார் . இவர் கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடைசியாக இவர் பைரவி ரணகல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த நவம்பர் 15ஆம் தேதி திரையிடப்பட்டது. மேலும் இவர் தமிழிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனுஷின் கேப்டன் மில்லர், ரஜினியின் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது ஜெயிலர் 2 திரைப்படத்திலும் இவர் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சிவராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனக்கு உடல்நல பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இருப்பினும் சிவராஜ்குமாருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்த தகவல் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அமெரிக்கா சென்று விட்டதாகவும் அங்கு அவருக்கு இது தொடர்பாக அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்த தகவல் ரசிகர்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அத்துடன் ரசிகர்கள் பலரும் அவர் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.