ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் சைரன் படத்திலிருந்து கண்ணம்மா எனத் தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது.
முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மோகன் ராஜா. இவர் தமிழ் திரையில் பல வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிறார். இவரது தம்பி ஜெயம் ரவி. மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானார் ரவி. முதல் படமே வெற்றித்திரைப்படமாக அமைந்ததால், அவர் அன்று முதல் இன்று வரை ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி குறுகிய காலத்திலேயே முதன்மை நாயகராக உருவெடுத்தார்
கடந்த ஆண்டு ஜெயம்ரவி உள்பட பெரும் நட்சத்திர பட்டாள நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ஜெயரம் ரவி நடிப்பில் வெளியான அகிலன், இறைவன் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றன. இதையடுத்து, ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் சைரன். ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சைரன் திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திலிருந்து கண்ணம்மா எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. வரும் 16-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளுக்கு வருகிறது.