சூர்யா 45 படப்பிடிப்பு தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. சூர்யாவின் 45 வது படமான இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு, சுவாசிகா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி வந்தது. அடுத்தது கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருகிறார். அதேசமயம் இப்படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே பொள்ளாச்சி, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூர்யா 45 படத்திற்காக ஈசிஆர்-ல் கோயில் போன்ற பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு திருவிழா பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் சூர்யா, திரிஷாவுடன் இணைந்து 500க்கும் மேலான நடனக் கலைஞர்கள் நடனமாடுவதாகவும், இப்பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார் என்றும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்களுக்கு இப்பாடலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.