சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பிரம்மாண்டமான நிகழ்காலம் மற்றும் பீரியாடிக் என இரு வேறு களங்களைக் கொண்ட படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பீரியாடிக் காட்சிகள் பேசும் படியாக இருக்கும் என இப்படத்தின் டீஸரிலேயே தெரிந்தது. மேலும் இப்படத்தில் நீருக்கு அடியில் நடப்பது போன்ற ஒரு சண்டை காட்சியும், உயரமான மரக்கிளைகளில் நடப்பது போன்ற சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. இவ்விரு காட்சிகளும் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று ஏற்கனவே செய்திகள் கசிந்தன.
இந்நிலையில் ஞானவேல் ராஜா கொடுத்துள்ள ஒரு புதிய அப்டேட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு ஏற்றி விட்டுள்ளது. இந்த அப்டேட்டில் அவர் கூறியிருப்பதாவது, நடிகர் சூர்யா இதற்கு முன்னதாக எந்த ஒரு படத்திலும் இல்லாத அளவுக்கு இப்படத்தில் திருப்தி அடைந்துள்ளார். சூர்யா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். கங்குவா திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கிய படங்களிலேயே சிறந்த படமாக இருக்கும். சிறுத்தை சிவா மிக எளிமையான மனிதர் மற்றும் மிகப்பெரிய கூட்டத்தையும் மிக சாதாரணமாக கையாள கூடியவர்.
மேலும் கலை இயக்குனராக பணியாற்றிய மிலனுக்கு பல விருதுகள் இப்படத்திற்காக கிடைக்கும். அவர் சமீபத்தில் மறைந்து விட்டாலும் இந்த நேரத்தில் அவரை மிஸ் பண்ணுகிறோம்” என்றும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். எனவே இப்படம் எவ்வளவு சிறப்பான படமாக உருவாகி வருகிறது என்பதை ஒவ்வொரு அப்டேட்டிலும் தவறாமல் சொல்லி வருகின்றனர் படக் குழுவினர். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.