நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா திரைப்படம் இன்று வரையிலும் பேசப்படுகிறது. சமீபகாலமாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த திரைப்படங்களை விட வில்லனாக நடித்த திரைப்படங்கள் தான் வசூலை வாரிக் குவிக்கும். ஆனால் அந்த எண்ணத்தை மகாராஜா திரைப்படம் உடைத்தெறிந்து 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கிடையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி இந்தியாவையும் முத்துராமலிங்க தேவரையும் விமர்சித்ததாக விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேசமயம் விஜய் சேதுபதியும் அந்த நபர் நடந்து கொண்டிருக்கும்போது பின்னால் இருந்து எட்டி உதைத்தார். இந்த வீடியோ காட்சிகள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வந்தது. அதன் பின்னர் அந்த நபருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய் சேதுபதியை உதைத்தால் ரூ. 1001 ரொக்க பரிசாக வழங்கப்படும் என்று பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அர்ஜுன் சம்பத்திற்கு ரூ. 4000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisement -