பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் திரைப்படம் 100 கோடியை கடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மலையாள நடிகர் பிரத்விராஜ் நடிப்பில் கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியான படம் தான் ஆடு ஜீவிதம். இப்படம் பிரபல எழுத்தாளர் பென்யமின் எழுதிய தி கோட் லைஃப் எனும் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட படமாகும். விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தை பிளஸ்ஸி இயக்கியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் வெளியான 9 நாட்களில் 100 கோடியை கடந்துள்ளதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் அதிவேகமாக 100 கோடி வசூல் செய்த பெருமையை ஆடு ஜீவிதம் படம் வென்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் பிரித்விராஜ் நடித்த படங்களிலேயே 100 கோடியை தொட்ட முதல் படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. மலையாள சினிமாவில் சமீபகாலமாக நல்ல கன்டென்ட் உள்ள படங்கள் வெளியாகி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து வரும் நிலையில் ஆடு ஜீவிதம் திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. இனிவரும் நாட்களிலும் இந்த படம் நல்ல வசூலை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.