விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்யன் படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன், என மாறுபட்ட கதையம்சம் கொண்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்து பல படங்களை தயாரித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அதைத்தொடர்ந்து இயக்குனர் சதீஷ் செல்வகுமார்,
இயக்குனர் கோகுல் மற்றும் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில் விஷ்ணு விஷால் கே பிரவீன் இயக்கத்தில் ஆர்யன் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து செல்வராகவன், வாணி போஜன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனமும் டி கம்பெனி ப்ரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விஷ்ணு சுபாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். இந்த படமானது ராட்சசன் படத்தை போல் க்ரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகி வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஷ்ணு விஷால் இன்று (ஜூலை 17) தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.