பாக்ஸ் ஆபிஸ் மன்னனான ஃபகத்… ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ஆவேஷம்..
நடிப்பில் அசுரனாக மாறும் மாபெரும் கலைஞர் ஃபகத் ஃபாசில். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அதில் இவர்தான் ஹீரோ. மலையாளத் திரை உலகில் அறிமுகமான இவர் பல படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் விக்ரம், புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். இது தவிர, தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ஆவேஷம். இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த 11-ம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஆவேஷம் திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. அண்மையில் வெளியாகும் அனைத்து மலையாளப் படங்களும் 100 கோடி வசூலை தாண்டிச்செல்லும் நிலையில், ஆவேஷம் திரைப்படமும் தற்போது 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி, பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக மாறி இருக்கிறது.