அமெரிக்காவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கௌரவம்… ரசிகர்கள் உற்சாகம்…
ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவின் இசைப் புயல். இளம் தலைமுறையினரின் இதயங்களை இசையால் ஈர்த்துக் கொண்ட ஆஸ்கர் நாயகன். இவர் தமிழ் சினிமா தொடங்கி, பாலிவுட், ஹாலிவுட் என திரை இசையைக் கடந்து தனி இசையால் பயணித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் மணிரத்னத்தின் ரோஜா திரைப்படம் மூலமாக கடந்த 1992- ஆம் ஆண்டில் தொடங்கியது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம். திருடா திருடா, காதலன், டூயட், பம்பாய், இந்திரா, இந்தியன், முதல்வன், உயிரே, தாஜ்மஹால், காதலர் தினம், அலை பாயுதே, பாய்ஸ், ஆயுத எழுத்து, கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் வரை முக்கிய படங்கள் எல்லாம் ஹிட் ஆனது.
பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன், இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வைப் காண்பித்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இசை மீதான பற்றை போலவே, தமிழ் மொழி மீது அதீத பற்றுக் கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆறு முறை தமிழக அரசின் மாநில சிறப்பு விருது, தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது, 13 முறை பிலிம் பேர் விருது பல சர்வதேச அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி நிறுவனம், அமெரிக்காவில் இசை பெருவிழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து சிறந்த இசை தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் இருந்து லகான், ஆர்ஆர்ஆர் மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், லகான் மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.