சர்தார் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கியிருந்த சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அரசியல் பின்னணியில் ஸ்பை திரில்லர் படமாக வெளியான இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முதல் பாகத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கி வருகிறார். கார்த்தியுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது எந்தவித உபகரணங்களும் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த விபத்தில் ஏழுமலையின் மார்பு பகுதியில் அடிபட்டு நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த துயர சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக சினிமா வட்டாரங்கள் தங்களின் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -