மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி- திருப்பி அளிக்கப்படும் கட்டணம்
இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த அசௌகரியங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் காரணம் இல்லை அவர் குறித்து தவறாக பதிவிட வேண்டாம் என மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ACTC நிறுவனர் ஹேமந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அடுத்த பனையூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அளவுக்கு அதிகமாக டிக்கெட்கள் விற்கப்பட்டதால் நிற்கக்கூட இடமில்லாமல் ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பலரால் பங்கேற்கமுடியாமல் போனது.
நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதது பற்றி வலைதளங்களில் பலர் ஆதங்கம் தெரிவித்த நிலையில் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. திட்டமிட்டதைவிட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும் ஏசிடிசி நிறுவனம் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனைக்கு காரணம் ஏ.ஆர்.ரகுமான் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தேடுத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து வீடியோ வாயிலாக விளக்கம் அளித்துள்ள ஏசிடிசி நிறுவனர் ஹேமந்த், “இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த அசௌகரியங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் காரணம் இல்லை அவர் குறித்து தவறாக பதிவிட வேண்டாம். செப்டம்பர் 10 ஆம் தேதி நடந்த மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் நிறைய அசௌகரியங்கள் நடந்துள்ளது அதை நாங்கள் மறுக்கவில்லை. நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டியது தான், ரகுமான் சாரின் பொறுப்பு அதை அவர் சிறப்பாக செய்தார். ஏ.ஆர்.ரகுமான் அவர் பணியை சிறப்பாக செய்தார் அவரைத் தாக்கி எந்த பதிவையும் பதிவிட வேண்டாம்.
கூட்ட நெரிசல், போலி டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தான் அதற்கு மன்னிப்பு கேட்கிறோம். நிகழ்ச்சிக்கு பதிவு செய்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு கண்டிப்பாக பணம் திருப்பி அனுப்பப்படும். அதற்கான Mail Id கொடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், டிக்கெட் இருந்தும் பங்கேற்க இயலாதவர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஈமெயில் மூலம் சுமார் 4000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என புகார் தெரிவித்திருந்தனர். டிக்கெட் நகலை சரி பார்த்து கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திருப்பி அளித்து வருகின்றனர்.