நடிகர் அஜித், துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதைத்தொடர்ந்து அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் பல தகவல்கள் தீயாய் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் சாதாரண பரிசோதனைக்காக மட்டுமே அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது சம்பந்தமாக நடிகர் அஜித்தின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ” மூளைக்கட்டி என்று நீங்கள் பகிர்ந்துள்ள இந்த தகவல் பொதுவானது என்றாலும் படிக்கும் சமயத்தில் பகீர் என்று ஆனது. அஜித் சாருக்கு மூளையில் கட்டி இல்லை. சமீபத்தில் அஜித் சாரின் நெருங்கிய நண்பர் வெற்றி துரைசாமி மரணத்திற்கு பின் அஜித் சார் கொஞ்சம் மனதளவில் சோர்ந்து இருக்கிறார். அதனால் சாதாரண பரிசோதனைக்காக மட்டுமே அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் மருத்துவமனையில் ஸ்கேன் போன்ற பல டெஸ்டுகள் செய்யப்பட்ட நிலையில் காதுக்கு கீழே உள்ள பகுதியில் சின்னதாக பல்ஜ் எனப்படும் புடைப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதை தொடர்ந்து அரை மணி நேரத்தில் அது சரி செய்யப்பட்டது. தற்போது அவர் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு அல்லது நாளை காலை டிஸ்டார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டி என்ற தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.