தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஜீவா. தொடக்கத்தில் காதல் திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த ஜீவா அடுத்து ஆக்ஷன் ஹீராவாக அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்திருந்தார். அண்மைக் காலங்களில் கவலை வேண்டாம், என்றென்றும் புன்னகை, சங்குலி புங்குலி கதவ திற, கலகலப்பு 2 என முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து கமர்ஷியல் படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். நடிகர் ஜீவா திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.
இதை கொண்டாடும் விதமாக நடிகர் ஜீவா அடுத்த கட்டமாக, இசை தயாரிப்பில் களம் இறங்கி இருக்கிறார். டெஃப் ப்ராக்ஸ் மியூசிக் லேபிளை தொடங்கி உள்ளார். இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், கார்த்தி, மிர்ச்சி சிவா, விச்சுவிஸ்வநாத், விவேக் பிரசன்னா, ஜித்தன் ரமேஷ் மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, சந்தோஷ் நாரயணன் உள்பட கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ஜீவா, கடந்த ஒரு ஆண்டாக இதற்கான முயற்சியை செய்து வருகிறோம். மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்கள் உருவாக்கும் பாடல் மற்றும் குறும் படங்களை தயாரிக்க உருவாக்கப்பட்டுள்ளது என்றார். ரஜினிகாந்த் கூறிய, யார் சொல்வதையும் கேட்காமல் நம் வேலையை செய்ய வேண்டும் என்பதை மையப்படுத்தி இந்நிறுவனத்திற்கு டெஃப் ஃப்ராக்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.