மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி நடிகர் மோகன், தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
கோலிவுட்டில் புரட்சிக் கலைஞராகவும் அதே சமயம், அரசியலிலும் வெற்றி நாயகனாக வலம் வந்தவர் விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர், நூற்றுக்கணக்கில் படங்களில் நடித்திருக்கிறார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், கிசிச்சை பலனின்றி அவர் மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாத நடிகர் நடிகைகள் விஜயகாந்தின் வீட்டிற்கும், அவரது நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா, கார்த்தி, ரம்பா, ராதா ஆகியோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் தனது நண்பர் என சொல்வதே எனக்கு மிகப்பெருமை என்றார். தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் சார்பில் ஆயிரம் பேருக்கு அவர் அன்னதானம் வழங்கினார். அப்போது, பிரேலதாவும் உடன் இருந்தார்.