நடிகர் பார்த்திபனின் 66 வது பிறந்த நாள் இன்று ( நவம்பர் 15).
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் புதுமைகளை கையாளக்கூடியவர். அந்த வகையில் புதுமைப்பித்தன் என்று பலரும் இவரை பாராட்டுவர். அதாவது இவருடைய பேச்சாக இருந்தாலும் எழுத்தாக இருந்தாலும் அதில் அவருடைய சிந்தனையை காணலாம்.
கடந்த 1957 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி எட்டயபுரத்தில் பிறந்த இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின்னர் சினிமாவில் ஆர்வம் உடைய இவர் 1984 இல் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதை தொடர்ந்து ராணுவ வீரன், தூரம் அதிகம் இல்லை போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய பார்த்திபன் புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்து சினிமாவில் ஒரு புதிய பாதையை உருவாக்கினார். அந்த படத்திற்காக தேசிய விருதையும் வென்றார். மேலும் புள்ளக் குட்டிக்காரன், பொண்டாட்டி தேவை, குடைக்குள் மழை என அடுத்தடுத்த வித்தியாசமான வெற்றி படங்களை தந்தார். இவ்வாறு இயக்குனராக வெற்றிக் கண்ட பார்த்திபன், பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடி கட்டு, புதுமைப்பித்தன், நீ வருவாய் என, அழகி போன்ற படங்களில் ஒரு சாதாரண கதாநாயகனாக பக்கத்து வீட்டு மனிதரைப் போல நிஜ வாழ்க்கையில் ஒன்று போகும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதிலும் வடிவேலுவிற்கும் இவருக்குமான காமெடி காட்சிகள் இன்று வரையிலும் ரசிகர்களுக்கு ஃபேவரைட். அடுத்தது ஒத்த செருப்பு, இரவின் நிழல் ஆகிய படங்கள் இவருடைய சினிமா பாதையில் புதுவித படைப்பு என்றே சொல்லலாம். கடைசியாக இவர் டீன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்தகைய பெருமைகளை உடைய பார்த்திபனின் சிந்தனைகளும் படைப்புகளும் எப்படி என்றும் புதுமையாக இருக்கிறதோ அதேப்போல் பார்த்திபனும் என்றும் புதுமையாகவும் நீண்ட ஆயுளுடனும் இருக்க அவருடைய பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்தி மகிழ்வோம்.