நடிகர் பிரித்விராஜ் சலார் 2 திரைப்படம் உருவாகும் என பேட்டி கொடுத்துள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தமிழிலும் பாரிஜாதம், கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மகேஷ்பாபு, ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் இவர் மோகன்லால் நடிப்பில் எம்புரான் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரித்விராஜ். இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சலார் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, “பிரசாந்த் நீல் NTR 31 படத்தை முடித்த பிறகும், பிரபாஸ் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தை முடித்த பிறகும் சலார் 2 திரைப்படம் நடக்கும்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 இல் டிசம்பர் மாதத்தில் பிரசாந்த் நீல், பிரபாஸ், பிரித்விராஜ் கூட்டணியில் வெளியான சலார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.