நடிகர் ரவி மற்றும் ஆர்ர்த்தியின் விவாகரத்து வழக்கு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் சமீபத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ரவி, சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் இவர் ஜீனி போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ரவி- ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களின் விவாகரத்து தொடர்பான செய்தி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. அதே சமயம் நடிகர் ரவி விவாகரத்தில் உறுதியாக இருக்க அவரது மனைவி ஆர்த்தி ரவியுடன் இணைந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார். எனவே இவர்களின் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ரவி மற்றும் ஆரத்தி ஆகிய இருவரையும் சமரச பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் ரவி, ஆர்த்தி இருவரும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக சமரச பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு இன்று (ஜனவரி 18) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வளத்தை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சமரச பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பின்னரே விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.