நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் குறித்து பேசி உள்ளார்.
தற்போது தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், ஆர்யாவின் தயாரிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1, 2 மற்றும் டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்கள் ஹாரர் கலந்த காமெடி கதைக்களத்தில் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. எனவே டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு வரை இப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் கலந்து கொண்ட சந்தானம், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “தில்லுக்குதுட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு என்னை பார்க்கும் அனைவரும் அடுத்தது எப்போ ஹாரர் படம் பண்ண போறீங்கன்னு கேப்பாங்க. அதனாலதான் டிடி ரிட்டர்ன்ஸ் வரை பண்ணினோம். அடுத்தது ஏர்போர்ட் போன்ற இடங்களில் கூட ரசிகர்கள் டிடி ரிட்டன்ஸ் 2 எப்போ வரும் என்று ஆர்வமாக கேட்பார்கள். இத்தனை பேர் ரசிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. டிடி ரிட்டன்ஸ் படம் பண்ணும் போது இந்த படம் வழக்கமான பேய் படம் போல இருக்கக்கூடாது என்று சொன்னேன்.
அதுல வர்ற ரன் or வின் விளையாட்ட பலரும் ரசிச்சாங்க. அதனால டிடி நெக்ஸ்ட் லெவல் படம் டிடி ரிட்டன்-ஸ விட வித்தியாசமான தான் இருக்கணும்னு சொன்னேன். அதுமட்டுமில்லாமல் செல்வராகவன், கௌதம் மேனன் ஆகியோருடன் இணைந்து நடித்தது எனக்கு மகிழ்ச்சி. டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நிறைய சர்ப்ரைஸ் வச்சிருக்கோம். ஹாரரையும் தாண்டி ஆக்சன், காமெடி என பிரமாதமாக வந்திருக்கிறது. இந்த கதை அடர்த்தியான காடு, தீவு, சொகுசு கப்பல் என பல இடங்களில் பயணிக்கும். அதுலயும் குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி எலியை வைத்து ஒரு அசத்தலான காமெடி இருக்கிறது.
அந்த காமெடியை பார்க்கும்போது உங்களோட கண்ணுல இருந்து கண்ணீர் வர்ற அளவுக்கு சிரிப்பீங்க. என்னுடைய படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. யூடியூப் சேனலில் படங்களை விமர்சிக்கும் விமர்சகராக நடித்திருக்கிறேன். ராப் ஸ்டைலில் பாடிக்கிட்டே ரிவ்யூ பண்றது தான் என்னுடைய கதாபாத்திரத்தின் ஸ்டைல். அந்த கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. அதன்பிறகு என்னென்ன சிக்கல் வருகிறது. அதிலிருந்து எப்படி இந்த ராப் ரிவ்யூவர் மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை” என்று தெரிவித்துள்ளார்.