நடிகர் சித்தார்த் தற்போது ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தனது 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் மிஸ் யூ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ராஜசேகர் இயக்க 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க கேஜி வெங்கடேஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து ஆஷிகா ரங்கநாத், பால சரவணன், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகர் சித்தார்த்திடம் யூடியூப் சினிமா விமர்சனங்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சித்தார்த், “எங்கள் படத்தைப் பொறுத்தவரை நீங்கள் உங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கிறது. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்குறீங்க அதனால் உங்களுடைய விமர்சனத்தை சொல்ல எந்த தடையும் இல்லை. படம் பிடித்திருக்கிறது என்றால் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று உங்களது ஸ்டைலில் சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திரையரங்க வளாகத்தில் பொதுமக்களிடம் விமர்சனம் கேட்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம், ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை தெரிவிக்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.