நடிகர் சித்தார்த், புஷ்பா 2 குறித்து பேசி உள்ளார்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம்தான் புஷ்பா 2. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க சுகுமார் இதனை இயக்கியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத், சாம் சி எஸ் ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெளியான 5 நாட்களில் கிட்டத்தட்ட 922 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஆயிரம் கோடி வசூலை இப்படம் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெற்ற போது அங்கு ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இது குறித்து நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி அவர், “கட்டுமான பணிகளுக்காக ஜேசிபி ஒன்று வந்து நின்றாலும் கூட்டம் கூடும். பாட்னாவில் அவ்வளவு கூட்டம் கூடுவதற்கு மார்க்கெட்டிங் தான் காரணம். மிகப்பெரிய மைதானம் ஏற்பாடு செய்தால் நிச்சயம் அங்கு கூட்டம் கூட தான் செய்யும். இந்தியாவில் கூட்டம் கூடுவது பெரிய விஷயம் கிடையாது. மேலும் கூட்டம் கூடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பந்தம் கிடையாது. எல்லா அரசியல் கட்சிக்கும் தான் கூட்டம் கூடுகிறது. ஆனால் அந்த அரசியல் கட்சிகள் ஏன் ஜெயிக்கவில்லை. கரகோஷமும் கூட்டமும் இயல்புதான். கூட்டத்தை வைத்து அந்த படம் வெற்றி பெறும் என்று சொல்லி விட முடியாது” என்று பேசியுள்ளார். சித்தார்த்தின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.