ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிக்காக நடிகர் சிவகார்த்திகேயன் நிதி உதவி வழங்கியுள்ளார்.
வங்க கடலில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்த நிலையில் சென்னையின் பல இடங்களில் நீர் தேங்கியது. மேலும் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சியிலும் புயல் பாதிப்புகள் ஏற்பட்டன. அதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்டெடுத்து வருகின்றனர். இருப்பினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்காகவும் நிவாரண பணிகளுக்காகவும் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதேசமயம் சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.