Homeசெய்திகள்சினிமாஅண்ணே மறக்க மாட்டேன்... வெற்றிமாறன் குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி...

அண்ணே மறக்க மாட்டேன்… வெற்றிமாறன் குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி…

-

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த மகா கலைஞன் சூரி. ஆரம்பத்தில் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், அந்த முகம் யாருக்குமே பரீட்சயப்படாமல் இருந்தது. வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் தான் சூரிக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதையடுத்து பல படங்களில் அவர் நகைச்சுவை நடிகராக பங்கேற்றார். அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், கார்த்தி என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த சூரி, இன்று அவரே முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.

இதற்கு அடித்தளமிட்டுக் கொடுத்த திரைப்படம் என்றால் அது விடுதலை முதல் பாகம். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம், ஏகபோக வரவேற்பை பெற்றதோடு, நகைச்சுவை நடிகராக இருந்த சூரியின் அடையாளத்தை ஒரு நடிகராக மாற்றியது. விடுதலை முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகத்திலும் சூரி நடித்து வருகிறார். இதனிடையே, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். சூரி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் கருடன். துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்க வெற்றிமாறன் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறனைப் பார்த்து, அண்ணே மறக்க மாட்டேன்.. விடுதலைக்கு முன்.. விடுதலைக்கு பின் என்று என் திரைவாழ்வு மாறி விட்டது. நான் மட்டும் இல்லாமல் என் குடும்பமே திரும்பி பார்ப்பார்கள் என்றார். மேலும், சசிகுமார் அண்ணாவுடன் ஆரம்பத்தில் இருந்து இருப்பதாகவும், ஒரு நாளும் தன்னை விட்டுக்கொடுத்ததில்லை என்றும் பேசினார். எனக்கு எப்போதும் நீங்கள் தான் ஹீரோ எனவும் நெகிழ்ச்சி பொங்க சூரி தெரிவித்தார். வெற்றி விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்தனர்.

MUST READ