நடிகர் சூர்யா விஜய் தேவரகொண்டாவிற்கு குரல் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரை உலகில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்கள் ரசிகர்களின் பேவரைட் படங்களாகும். தற்போது இவர் VD 12 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கௌதம் தின்னனுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனமும் ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் இந்த படமானது 2025 மார்ச் மாதம் 28ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் டைட்டில் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான் நாளை (பிப்ரவரி 12) இந்த படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த டீசரில் விஜய் தேவரகொண்டாவிற்கு, நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார் எனவும் படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தது இந்த படத்தின் இந்தி பதிப்பிற்கு ரன்பீர் கபூர் குரல் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.