‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இது குறித்து நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’.
பட்டியலினப் பிரிவினுள் வரும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், காவல்துறையால் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. விமர்சன ரீதியாக ஜெய்பீம் வரவேற்பைப் பெற்றாலும் பல விவாதங்களையும் ஏற்படுத்தியது. இருப்பினும் ரசிகர்கள் ஆதரவைப் பெற்ற ஜெய்பீம் திரைப்படம் 94-வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம்பிடித்திருந்தது.
இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதை மகிழ்ச்சியுடன் சூர்யா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். நல்ல முயற்சியை வரவேற்று கொண்டாடிய அனைவருக்கும் நன்றி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.