தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், வீடுகள் முழுவதையும் வெள்ளநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நெல்லை நகர்ப்பகுதியில் மழை வெள்ளத்தால் கான்கிரீட் வீடு சில நொடிகளில் இடிந்து தரமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில்லு சில்லாக உடைந்துபோன வீட்டை கண்ட உரிமையாளர்கள் மனம் உடைந்து கதறி அழுதனர்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீட்புப் பணிகளை பார்வையிட்டார். அவருடன் இணைந்து இயக்குநர் மாரி செல்வராஜும் மீட்புப் பணிகளை செய்தார். அதுமட்டுமில்லாமல் தனது சமூக வலைதள பக்கத்தில் வரலாறு காணாத பேரிடரில் இருந்து மக்களை விரைவாக மீட்டெடுக்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்திருந்தார். மாரி செல்வராஜின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டிய அதே சமயத்தில், பலரும் அமைச்சருடன் மாரி செல்வராஜுக்கு என்ன வேலை என விமர்சித்து வந்தனர். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல…. நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது என மாரி செல்வராஜ் பதிவிட்டிருந்தார்.
தற்போது, மாரி செல்வராஜூக்கு ஆதரவாக நடிகர் வடிவேலுவும் குரல் எழுப்பியுள்ளார். அது அவருடைய ஊரு. அவர் என்ன அமெரிக்கக்காரனா? இப்படி தப்பு தப்பா பேசறாங்க. உதயநிதி எதற்கு சென்றார் என்றுலாம் சிலர் கேற்கிறார்கள். அவர் அமைச்சர், மேலிடத்தில் வரும் உத்தரவுகளை பின்பற்றுகிறார் என வடிவேலு தெரிவித்துள்ளார். மாரி செல்வராாஜ் இயக்கி மாமன்னன் படத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.