நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் ஏற்கனவே துருவ நட்சத்திரம் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கும் நிலையில் அடுத்ததாக விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. அதேசமயம் இவர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். இவ்வளவு பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது தங்கலான் படத்திற்காக பல இடங்களுக்கு சென்று தனது படக்குழுவுடன் இணைந்து ப்ரோமோஷன் செய்து வருகிறார். அந்த வகையில் கேரளாவிலும் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் கடந்த ஒரு மாத காலமாக கேரளாவில் பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கோழிக்கோடு, மலப்புரம் வயநாடு போன்ற பகுதிகளில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பலரும் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவ வீரர்கள் என அனைவரும் இவர்களை காப்பாற்ற போராடி வருகிறார்கள். இது தொடர்பாக திரைப்படங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் வேதனையை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விக்ரம் வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் கேரள முதலமைச்சரின் மீட்பு பணிக்காக வழங்கியுள்ளார். இதனை விக்ரமின் மேலாளர் யுவராஜ் உறுதி செய்திருக்கிறார்.
- Advertisement -