Homeசெய்திகள்சினிமாவிஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு... இறுதி விசாரணை குறித்து அறிவிப்பு...

விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு… இறுதி விசாரணை குறித்து அறிவிப்பு…

-

இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவர் லைகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர். மேலும் இவர் தமிழ்நாட்டில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சமீபகாலமாக மிகப்பெரிய பொருட்செலவிலான படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 படங்கள் ஆகியவை கூட லைக்கா நிறுவன தயாரிப்புகள்தான்.

இந்நிலையில், நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் சுமார் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றார். இந்த தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு, மொத்தமாக பணத்தை செலுத்தியது. ஆனால், இந்த தொகையை முழுவதுமாக திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளையும் லைகாவுக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், ஒப்பந்தத்தை மீறி நடிகர் விஷால் வீரமே வாகை சூடும் படத்தை வௌியிட்டதால், லைகா நிறுவனம் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நடிகர் விஷால் 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், விசாரணையில் லைகா நிறுவனம் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், திரைப்பட வாய்ப்புகளை தடுப்பதாகவும் விஷால் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என லைகா நிறுவனமும் பதில் தெரிவித்துள்ளது. இதனால், இறுதி விசாரணையை வரும் ஜூன் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

MUST READ