நடிகர் விஷால், சூரி பட இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஷால் கடைசியாக ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தது இவர் துப்பறிவாளன்-2 திரைப்படத்தை தானே இயக்கி நடிக்க போவதாக தகவல் வெளியாகி வந்தது. ரசிகர்களுக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. இருப்பினும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷால் ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த மே மாதம் சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம் விஷால். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் துரை செந்தில்குமார் மற்றும் விஷால் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தினை பைவ் ஸ்டார் நிறுவனத்தின் சார்பில் கதிரேசன் தயாரிக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகி வருகிறது. மேலும் துரை செந்தில்குமார், கருடன் படத்திற்கு பிறகு லெஜெண்ட் சரவணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். எனவே அந்தப் படத்தை முடித்துவிட்டு விஷாலை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.