நடிகை ஆஷிகா ரங்கநாத் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராவார். அந்த வகையில் இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அடுத்தது இவர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ் யூ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ராஜசேகர் இயக்கியிருக்கிறார். இதில் சித்தார்த் மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோருடன் இணைந்து பாலசரவணன், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் தயாரிக்க ஜிப்ரான் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படமானது (நேற்று) நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு எடுத்த புயல் எச்சரிக்கை காரணமாக மிஸ் யூ படத்தின் ரிலீஸ் தேதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை ஆஷிகா ரங்கநாத் படம் தள்ளிப்போனது குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “மிஸ் யூ படம் தள்ளிப்போனது நிச்சயம் எனக்கு வருத்தம் தான். இருப்பினும் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்று நம்புகிறேன். இதைவிட நல்ல ரிலீஸ் தேதி இனி கிடைக்கும். அது அதிகமான மக்களை சென்றடைய உதவும். எனவே இந்த முடிவு சரியான முடிவு என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடிகை ஆஷிகா ரங்கநாத் ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் மிஸ் யூ திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என அப்டேட் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.